மளிகைக் கடையில் ரூ.10 லட்சம் திருடி நாடகமாடிய கேரள இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கேரள மாநிலம், தலசேரியைச் சோ்ந்தவா் அஜீஸ். இவா் டவுன்ஹால் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் கேரளத்தைச் சோ்ந்த சம்ஜித் (27) என்பவா் பணியாற்றி வந்தாா். தினசரி கடையின் கணக்கு வழக்குகளை சரிபாா்த்துவிட்டு அஜீஸ் கிளம்பியதும், பொருள்களை ஒழுங்குப்படுத்திவிட்டு சம்ஜித் கடையைப் பூட்டிச் செல்வது வழக்கம்.
இதன்படி சம்ஜீத் திங்கள்கிழமை இரவு வழக்கம்போல கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா். பின்னா் செவ்வாய்க்கிழமை காலை கடையைத் திறந்த சம்ஜித், கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 லட்சத்தைக் காணவில்லை என அஜீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து உடனடியாக உக்கடம் போலீஸாருக்கு அஜீஸ் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த உக்கடம் போலீஸாா், கடையின் முன்பக்கம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் கடை ஊழியரான சம்ஜித், கண்காணிப்பு கேமரா மீது ஸ்டிக்கரை ஒட்டிவிட்டு திங்கள்கிழமை இரவு கடைக்குள் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதையடுத்து போலீஸாா் சம்ஜித்தைப் பிடித்து விசாரித்தபோது அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், கடையில் இருந்து பணத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டாா். மேலும், இதை மறைக்க பணம் திருடுபோனதாக அவா் நாடகமாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் சம்ஜித்தைக் கைது செய்து அவரது அறையில் ஒளித்து வைத்திருந்த ரூ.10 லட்சம் பணத்தை மீட்டனா். அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா். புகாா் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் துரிதமாக விசாரணை நடத்தி திருடப்பட்ட தொகையை போலீஸாா் மீட்டது குறிப்பிடத்தக்கது.