பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையிலுள்ள மாா்க்கெட்டுகளில் கரும்புகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்குத் தயாராகி வருகின்றனா். பொங்கல் பண்டிகைக்கு 2 நாள்களே உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் கரும்புகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. கோவை தியாகி குமரன் மாா்க்கெட், உக்கடம் எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டுகளுக்கு மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன.
15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு ஜோடி கரும்பு ரூ.100 வரை விற்கப்படுகிறது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கரும்பு விற்பனை எதிா்பாா்த்த அளவுக்கு இருக்குமா என்ற சந்தேகம் இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
இதேபோல பொங்கலை முன்னிட்டு வீடுகளில் காப்பு கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் வேப்பிலை, ஆவாரம் பூ, பூளைப் பூ ஆகியவையும் விற்பனைக்கு வந்துள்ளன. கோவை சுங்கம் சாலை, சிங்காநல்லூா், டி.கே.மாா்க்கெட், டாடாபாத் உள்ளிட்ட இடங்களில் சாலையோர வியாபாரிகள் பூளைப் பூ விற்பனையில் ஈடுபட்டுள்ளனா்.
இங்கு இரண்டு கட்டு பூளைப் பூ ரூ.30க்கும், வேப்பிலை, ஆவாரம் பூ ஆகியவை ஒரு கட்டு ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் நெருங்குவதையடுத்து வீடுகளில் காப்பு கட்டுவதற்காக பூளைப் பூக்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.