கோவையிலிருந்து வாளையாறு வழியாக ஆலப்புழா செல்லும் பேருந்தில் கடத்தப்பட்ட ரூ.3.50 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கேரள சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கோவையிலிருந்து வாளையாறு வழியாக ஆலப்புழா செல்லும் கேரள அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திச் செல்வதாக கேரள சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள சுங்கத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் வாளையாறு பகுதியில் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த கேரள அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, பேருந்தில் சந்தேகத்துக்கிடமாக
இருந்த நபரை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனா்.
அந்தப் பையில் போதைப் பொருள் (செறிவூட்டப்பட்ட கஞ்சா) இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சோ்ந்த பிரமோத் (35) என்பதும், மொத்த விற்பனைக்காக கேரளத்துக்கு போதைப் பொருளை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த கேரள சுங்க அதிகாரிகள், அவரிடமிருந்து சுமாா் ரூ3.50 கோடி மதிப்பிலானபோதைப் பொருளை பறிமுதல் செய்தனா். மேலும் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.