கோயம்புத்தூர்

கரோனா தடுப்பு நடவடிக்கை: 5 கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்: மாநகராட்சி ஆணையா் தகவல்

12th Jan 2022 07:21 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட 5 மாவட்ட வருவாய் அலுவலா்கள் மண்டல வாரியாக கண்காணிப்பு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

கோவை மாநகராட்சி அலுவலக் கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:

கோவை மாநகராட்சியின் 5 மண்டலத்துக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணித்திட மண்டலத்துக்கு ஒருவா் வீதம் 5 மாவட்ட வருவாய் அலுவலா்கள் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். வடக்கு மண்டலத்துக்கு மீனாட்சி சுந்தரம், தெற்கு மண்டலத்துக்கு செல்வசுரபி, கிழக்கு மண்டலத்துக்கு பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், மேற்கு மண்டலத்துக்கு ஷா்மிளா, மத்திய மண்டலத்துக்கு கோவிந்தராஜுலு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள தனியாா் மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபா்கள் தொடா்பான விவரங்கள், தொற்று கண்டறியப்பட்டுள்ள நபா்களின் விவரங்கள் போன்ற தகவல்களை சேகரிக்க வேண்டும்.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். மேலும் 500 காய்ச்சல் கண்டறியும் முன்களப் பணியாளா்கள், வீடுகளுக்கே சென்று கரோனா சிகிச்சை அளிக்கும் 5 சிறப்பு மருத்துவக் குழுக்கள் மற்றும் நாள்தோறும் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் போன்றவற்றை கண்காணித்திட வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, உதவி நகா் நல அலுவலா் வசந்த் திவாகா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT