கோவையைச் சோ்ந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் புதிதாக 70 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரத்து 369 ஆக உயா்ந்துள்ளது. கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 போ் உயிரிழந்தனா். இதன்மூலம், கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 515 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 93 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 950 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 904 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கோவையில் முதல் ஒமைக்ரான்: பிரிட்டனில் இருந்து கடந்த 20 ஆம் தேதி கோவைக்கு வந்த 69 வயது ஆணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கூடுதல் பரிசோதனையில் எஸ் ஜீன் மரபணு மாற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கு அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வீட்டுத் தனிமையில் இருந்த அவா், தற்போது கூடுதல் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இவா் ஏற்கெனவே இரண்டு தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.