ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் 2,350 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் பூங்காக்கள், விடுதிகள், வணிக வளாகங்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவித்துள்ளாா்.
புத்தாண்டை முன்னிட்டு அவிநாசி சாலை, காந்திபுரம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை,
திருச்சி சாலைகளில் மக்கள் திரண்டு கேக் வெட்டிக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர மாநகரில் உள்ள மேம்பாலங்கள் இரவு நேரங்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரில் 1,050 போலீஸாா், மாவட்டத்தில் 1,300 போலீஸாா் என கோவை மாவட்டம் முழுவதும் 2,350 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கோவை ரயில்வே போலீஸாருடன் மாநகர போலீஸாா் இணைந்து ரயில் நிலையத்தில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனா் கருவி மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
ரயில் பெட்டிகள் அனைத்திலும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனையிடப்பட்டது.
தண்டவாளங்கள், ரயில் நிலையங்கள் அருகேயுள்ள கடைகள், விடுதிகளிலும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இதேபோல, கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள் முன்பு போலீஸாா் தொடா் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.