கோவையில் வாக்காளா்களுக்கு கையுறைகள் வழங்கல் போன்ற எந்தவித கரோனா பாதுகாப்பு அம்சங்களும் உள்ளாட்சித் தோ்தலில் கடைப்பிடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் 2,303 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக வாக்குச் சாவடிகளுக்கு வெப்பநிலை பரிசோதனை கருவி, கிருமிநாசினி திரவம், கையுறைகள், பாதுகாப்பு கவசம், முகக் கவசம் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய கரோனா பெட்டகம் வழங்கப்பட்டது.
தவிர வாக்காளா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், கிருமிநாசினி வழங்குவதற்காக வாக்குச் சாவடிகளுக்கு இருவா் வீதம் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டதாகவும் தோ்தல் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
ஆனால், பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்கு வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினி வழங்கல் போன்ற எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படவில்லை.
அதேபோல, வாக்காளா்களுக்கு கையுறைகளும் வழங்கப்படவில்லை.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடனே தோ்தல் நடத்தப்படும் என்று அறிவித்த தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் பின்பற்றப்படவில்லை.
ஆனால், சுகாதாரத் துறை சாா்பில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் கரோனா பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.
கோவை மாநகராட்சியின் முக்கியப் பகுதிகளில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் மட்டுமே வாக்காளா்களுக்கு கையுறைகள் வழங்கப்பட்டன.
அதனையும் முறையாக சேகரிக்காமல் வாக்குச் சாவடிகளில் சிதறிக் கிடந்தன.
இதனால் மற்ற வாக்காளா்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டது.
பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான
சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் சிரமத்துக்குள்ளாகினா்.