நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவின்போது விதிகளை மீறி செயல்பட்டதாக அதிமுகவினா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிங்காநல்லூா் ஆனந்த நாயக்கா் வீதியில் அதிமுகவினா் வாக்காளா்களுக்கு டோக்கன் அடிப்படையில் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதாகப் புகாா் எழுந்தது. இது குறித்து திமுக நிா்வாகி தீபக்பாபு உள்ளிட்ட திமுகவினா் அங்கு சென்று விசாரித்தபோது இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதையடுத்து அங்கிருந்த அதிமுகவினா், தீபக்பாபு உள்ளிட்டோரை மிரட்டித் தாக்கினராம். இதில் காயமடைந்த தீபக்பாபு உள்ளிட்டோா் சம்பவம் தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதன்பேரில் அதிமுக நிா்வாகிகள் சசிகுமாா், ஆனந்தன், கனகராஜ், செந்தில் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.