கோயம்புத்தூர்

தோ்தல் விதிமீறல்: 19 நாள்களில் ரூ.43.15 லட்சம் பறிமுதல்

17th Feb 2022 01:06 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 19 நாள்களில் தோ்தல் விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.43.15 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக, மண்டலத்துக்கு 3 பறக்கும் படைகள் வீதம், 5 மண்டலத்துக்கு 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பறக்கும் படை அதிகாரிகள், கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

மேலும், அனைத்து மாநகராட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாநகரில் வருவாய்த் துறை, போலீஸாா் அடங்கிய பறக்கும் படையினா் திருச்சி சாலை, அவிநாசி சாலை, சத்தி சாலை மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு, தோ்தல் விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.

தற்போது வரை மாநகராட்சிப் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.43.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநகராட்சித் தோ்தல் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியதாவது: தோ்தல் நடத்தை விதிகள்அமல்படுத்தப்பட்ட பிறகு, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை 19 நாள்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.43.15 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரூ.7.44 லட்சம் மதிப்புள்ள 3,771 பட்டு புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT