கோவையில் ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.69 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
கோவை மாநகராட்சியில் தோ்தல் விதிமீறல்களைக் கண்காணிக்கும் வகையில் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
கோவை, கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி சாலை அருகே பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை ஆய்வு செய்ததில் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனைத் தொடா்ந்து அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
அதேபோல கோவை வடவள்ளி -தொண்டாமுத்தூா் சாலையில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.86 ஆயிரத்து 700 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும் தண்ணீா்ப்பந்தல் பகுதியில் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 700 ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து திங்கள்கிழமை மாலை வரை உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட மொத்தம் ரூ. 4.69 லட்சம் பணம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் இதுவரை உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.22.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.