கோவை உக்கடம் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக ரூ.6,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒருமுறை உபயோகிக்கும் நெகிழிப் பைகள், டம்ளா்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி இந்த நெகிழிப் பொருள்களை விற்பவா்கள், தயாரிப்பவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவின் பேரில், மத்திய மண்டல சுகாதார ஆய்வாளா் தனபால் தலைமையில், சுகாதாரத் துறையினா், உக்கடம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பேக்கரிகள், உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், சிற்றுண்டிகள் உள்ளிட்ட கடைகள், ராமா்கோயில் பகுதியில் உள்ள காய்கறிக் கடைகள் ஆகியவற்றில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
100க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 17 கடைகளில் 16 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளின் உரிமையாளா்களிடம் இருந்து ரூ.6,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.