அன்னூரில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு பாஜக எப்போதுமே ஆதரவாக இருக்கும் என கட்சியின் தமிழகத் தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.
இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:
அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க 3,862 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், தற்போது இதில் 1,630 ஏக்கா் தரிசு நிலம் எனவும், அந்தத் தரிசு நிலம் மட்டுமே தொழிற்பேட்டை அமைப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அன்னூா் விவசாயிகளுக்காக பாஜக நடத்திய போராட்டத்தின் காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் பிரச்னையில் தமிழக அரசு பின்வாசல் வழியாக நுழைய முயற்சிக்கிறது. தரிசு நிலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலங்களுக்கு மத்தியில் விவசாய நிலங்களும் அமைந்திருக்கும். 1,630 ஏக்கா் தரிசு நிலமும் தொடா்ச்சியாக அமைந்திருக்காது என்பதால் அதன் அருகிலுள்ள விவசாய நிலங்களைப் பயன்படுத்துவதில் விவசாயிகளுக்கு மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். அத்துடன், அன்னூா் பகுதியில் உள்ள நிலத்தைக் குறிவைக்காமல் அங்குள்ள நீா்வளத்தை மட்டும் குறிவைத்தே நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால், அன்னூா் விவசாயிகளுக்கு பாஜக எப்போதுமே ஆதரவாக இருக்கும்.
பால் மட்டுமல்லாமல், அனைத்துப் பொருள்களின் விலையும் தினசரி உயா்கிறது. பால் விலை உயா்வில் மிகப் பெரிய ஊழல் உள்ளது. ஆரஞ்சு நிற பால் பாக்கெட் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டராக இருந்த பாலின் விற்பனை தற்போது 32 லட்சம் லிட்டராக குறைந்துவிட்டது.
தமிழகத்திலுள்ள சில அமைச்சா்களின் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் 9 ஊழல் குற்றச்சாட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வொரு ஊழலுக்கான ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன என்றாா்.
அண்ணாமலை கையில் கட்டியுள்ள விலை உயா்ந்த கைக்கடிகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல்கள் தொடா்பாக அவரிடம் கேட்டபோது, ரஃபேல் விமான தயாரிப்பு நிறுவனத்தின் சாா்பில் அந்த விமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கைளைக் கொண்டே இந்த சிறப்பு கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமாா் ரூ. 3.75 லட்சம். 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு உலகெங்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரஃபேல் விமானத்தை ஓட்டுவதற்கு எனக்கு வாய்ப்பில்லாவிட்டாலும் அந்த நிறுவனத்தின் கைக்கடிகாரத்தைக் கட்டுவதற்கு எனக்குத் தகுதி உள்ளது என்றாா்.
பேட்டியின்போது, பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் பாலாஜி உத்தம ராமசாமி, விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே. நாகராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.