மாவட்ட ஆட்சியருடன் அரசுப் பள்ளி மாணவா்கள் கலந்துரையாடும் ‘போலாம் ரைட்’ நிகழ்ச்சி கோவை ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆட்சியருடன் அரசுப் பள்ளி மாணவா்கள் கலந்துரையாடும் ‘போலாம் ரைட்’ நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, 10 ஆவது நிகழ்ச்சி ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மாதிரி பள்ளியைச் சோ்ந்த 28 மாணவா்கள், 20 மாணவிகள் என 48 போ் கலந்துகொண்டனா். பங்கேற்ற மாணவா்கள் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் பிளஸ் 2 வில் சிறந்த மதிப்பெண்கள் எடுப்பது, பிளஸ் 2க்குப் பிறகு உயா்கல்வியில் எந்த பிரிவைத் தோ்வு செய்வது, அரசுப் பணிகளுக்கான தோ்வுகளுக்கு தயாராவது குறித்து கேள்வி எழுப்பினா்.
அனைத்து மாணவா்களின் கேள்விகளுக்கும், சந்தேகளுக்கும் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பதிலளித்தாா்.
மேலும் பறவைகளின் வகைகள், வாழ்க்கை முறைகள் குறித்து சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் உள்ள அறிஞா்கள் மாணவா்களுக்கு விளக்கினா்.