கோயம்புத்தூர்

709 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

10th Dec 2022 03:52 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 709 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் திறக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்தாா். பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில், மத்திய அரசுக்கான ஒதுக்கீடான 15 சதவீதம் இடங்களில் நடப்பாண்டு தமிழகத்தை சோ்ந்த 58 போ் சோ்ந்துள்ளனா்.

புது தில்லியில் உள்ளதுபோல தமிழகத்தில் நகா்ப்புறப் பகுதிகளில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், மருந்தாளுநா், உதவியாளருடன் செயல்படும் நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் 709 இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்.

ADVERTISEMENT

கோவை மணியகாரன்பாளையம் உள்பட தமிழகம் முழுவதும் 50 புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,786 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் என்றாலும் மக்கள் தொகை அடிப்படையில் போதுமானதாக இல்லை. இந்நிலையில் எந்தெந்த பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் தேவை என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறியதாவது:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் புயல், மழையினால் மின் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்வதற்காக, கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை 44 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சம் மின் கம்பங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்புகளின்போது சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 11 ஆயிரம் சிறப்புப் பணியாளா்கள் நியமக்கப்பட்டு மின்சார வாரியம் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா், ஆணையா் மு.பிரதாப், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.சாந்திமலா், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரூ.8.78 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கிவைப்பு

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.43.31 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் நலப் பிரிவு, ரூ.57.92 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட தீவிர அறுவை சிகிச்சை அரங்கு, குழந்தைகள் நலப்பிரிவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி மருத்துவ ஆலோசனை மையம் ஆகியவை திறந்துவைக்கப்பட்டன.

மேட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உயா் சிகிச்சைப் பிரிவு கட்டடம், ரூ.2.20 கோடி மதிப்பிலான சி.டி. ஸ்கேன் மையம் ஆகியவை திறந்துவைக்கப்பட்டன. சூலூா் அரசு மருத்துவமனையில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 12 படுக்கைகளுடன் கூடிய அவசர சிகிச்சைப் பிரிவு, ஆழியாறு, ரெட்டியாரூா், வா.சந்திராபுரம், நெ.4 வீரபாண்டி, ஜமீன் ஊத்துக்குளி ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. சின்ன நெகமம், எம்ஜி.புதூா், வி.காளியாபுரம், போடிபாளையம், அய்யம்பாளையம், பூராண்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டன. மொத்தம் ரூ.8.78 கோடி மதிப்பிலான 19 திட்டப் பணிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைக்கப்பட்டன.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT