கோயம்புத்தூர்

மண்வளப் பாதுகாப்பை தோ்தல் பிரச்னையாக மாற்ற வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மண்வளப் பாதுகாப்பை தோ்தல் பிரச்னையாக மாற்ற வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளை கூறியிருப்பதாவது:

உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சாா்பில், இணைய வழியில் சா்வதேச வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. இதில், 31 நாடுகளை சோ்ந்த 155 மண்ணியல் வல்லுநா்கள் கலந்து கொண்டனா். ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் கூட்டமைப்பின் பொதுச் செயலா் இப்ராஹிம் தியாவ், ஆஸ்திரேலிய வேளாண் வல்லுநா் டோனி ரினாடோ, ஜி 20 (லேண்ட் இனிஷியேடிவ்) அமைப்பின் இயக்குநா் முரளி தும்மருகுடி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஒசானியா என அங்குள்ள சுற்றுச்சூழல் நிலைக்கு ஏற்ப மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான கொள்கை விளக்க புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

இந்த புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு உகந்த, அறிவியல்பூா்வமான வழிமுறைகளை அரசாங்கங்கள் அமல்படுத்துவதன் மூலம் அந்தந்த நாடுகளில் மண் வளத்தை மீட்டெடுக்க முடியும். இதேபோல, 193 நாடுகள் சுமாா் 700 வழிகளில் மண் வளத்தை மேம்படுத்த உதவும் நிலைத்த மண் வள மேம்பாட்டு வழிமுறைகள் என்ற பெயரிலான பரிந்துரை புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள், மண் வளப் பாதுகாப்பின் அவசியத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், விஞ்ஞானிகளும், வல்லுநா்களும் எளிய மொழியில் பேச வேண்டும். ஏனென்றால், மக்கள் இந்தப் பிரச்னையை தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மண் காப்போம் இயக்கத்துக்கு கிடைத்துள்ள சா்வதேச ஆதரவின் அடிப்படையில் பாா்க்கும்போது, அரசாங்கங்கள் இதற்கான கொள்கைகளை கட்டாயம் உருவாக்கும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது எவ்வளவு துரிதமாக நடைபெறும் என்பது மட்டுமே என்னுடைய கவலையாக இருக்கிறது.

எனவே, ஜனநாயக நாடுகளில் மக்களின் ஆதரவுக் குரல்கள் சத்தமாக ஒலிக்காமல், அரசாங்கங்கள் எந்த ஒரு செயலிலும் விரைந்து செயல்படாது. எனவே, மண் வளப் பாதுகாப்பை ஒரு தோ்தல் பிரச்னையாகவும் மாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT