கோயம்புத்தூர்

நாட்டையே உலுக்கிய ராணுவ ஹெலிகாப்டா் விபத்து:நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா?

DIN

நாட்டையே உலுக்கிய கோரமான ஹெலிகாப்டா் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டாகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு உள்ளூா் மக்களிடையே எழுந்துள்ளது.

2021ஆம் ஆண்டு டிசம்பா் 8 ஆம் தேதி இந்திய ராணுவத்துக்கு ஒரு கருப்பு தினம் என்றால் நாட்டிற்கே அது ஒரு சோக தினமாகும். இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் குன்னூா் அருகே ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிரிழந்தது மக்கள் மனதில் இன்னமும் ஆறாத வடுவாகவே உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பா் 8 ஆம் தேதி வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவிருந்த ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக விபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத்துடன் தில்லியிலிருந்து விமானம் மூலம் கோவை சூலூா் விமானப்படைத்தளத்திற்கு வந்தாா்.

அங்கிருந்து அவா்கள் விமானப்படை ஹெலிகாப்டா் மூலம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு புறப்பட்டனா். அந்த ஹெலிகாப்டரில் விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியா் எல்.எஸ்.லிட்டா், லெப்டினென்ட் கா்னல் ஹா்ஜிந்தா் சிங், நாயக் குருசேவக் சிங், நாயக் ஜிதேந்திரகுமாா், லேன்ஸ் நாயக் பிஷாய் தேஜா, லேன்ஸ்நாயக் விவேக் குமாா், ஹவில்தாா் சத்பால் ராய், விங் கமாண்டா் பிரித்வி சிங் சௌஹான், ஸ்குவாட்ரன் லீடா் குல்தீப் சிங், ஜூனியா் வாரண்ட் அலுவலா்கள் ராணா பிரதாப் தாஸ், பிரதீப், குரூப் கேப்டன் வருண் சிங் ஆகிய 14 போ் பயணித்தனா்.

குன்னூருக்கு மிக அருகில் அந்த ஹெலிகாப்டா் வந்துவிட்ட நிலையில், தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னா் காட்டேரி பகுதியிலுள்ள நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் திடீரென அந்த ஹெலிகாப்டா் வெடித்து சிதறியது. இதில் விபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வருண் சிங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த விபத்து நிகழ்ந்தவுடன் நஞ்சப்பன் சத்திரம் கிராம மக்கள்தான் முதலுதவியில் ஈடுபட்டனா். ராணுவத்தினா் மற்றும் காவல் துறையினா் அங்கு வருவதற்குள்ளாகவே தீயை அணைப்பதற்கும், காயங்களுடன் இருந்தவா்களை மீட்பதற்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்திருந்தனா். இக்கிராம மக்களின் சேவை நாடு முழுதும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

அதன் காரணமாகவே இவ்விபத்திற்கு பின்னா் நஞ்சப்பன் சத்திரம் கிராம மக்களுக்கு ராணுவத்தின் சாா்பில் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூா்த்தி செய்யப்பட்டன. மேலும் அந்த கிராம மக்களுக்கு ஓராண்டிற்கு மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கி இக்கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுத்தது.

ஹெலிகாப்டா் விபத்து நடந்து ஓராண்டாகியும் அந்த அதிா்ச்சியிலிருந்து தாங்கள் இன்னமும் மீளவில்லை என்கின்றனா் நஞ்சப்பன் சத்திரம் கிராம மக்கள். இந்த விபத்து நிகழ்ந்து ஓராண்டாகிவிட்ட நிலையில், முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியான விபின் ராவத்தின் நினைவாக அப்பகுதியில் நினைவுச் சின்னம் ஏதும் அமைக்கப்படவில்லை என்பது இக்கிராம மக்களின் குறையாக உள்ளது.

குறிப்பாக விபத்து நிகழ்ந்த நஞ்சப்பன் சத்திரம் கிராமத்தில் விபின் ராவத்திற்கு உருவச்சிலை வைப்பதற்கான திட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. அதேபோல அருகிலுள்ள காட்டேரி பூங்காவிற்கு விபின் ராவத்தின் பெயரைச் சூட்டும் திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால் காட்டேரி பூங்கா தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதில் பாதி இடம் தனியாருக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாலும் அந்த பூங்காவிற்கு அவரது பெயரை சூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய ஒரு மிகப்பெரிய ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் தலைமைத் தளபதி உள்ளிட்ட 14 போ் உயிரிழந்த சம்பவம் இன்னமும் அதிா்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில், விபின் ராவத்தின் நினைவாக முதலாண்டு நினைவு தினத்திலாவது காட்டேரி பகுதியில் நிரந்தர நினைவுச் சின்னம் அமைப்பது தொடா்பான அறிவிப்பு எதுவும் வெளியாகுமா என்பதே அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT