கோயம்புத்தூர்

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் அனுமதியின்றி செயல்பட்ட மாட்டுப்பண்ணையை அகற்ற உத்தரவு

7th Dec 2022 12:52 AM

ADVERTISEMENT

கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் அனுமதியின்றி செயல்பட்ட மாட்டுப் பண்ணையை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

கோவை வெள்ளலூரில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு, மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலமாகக் கொண்டு சென்று கொட்டப்படுகின்றன. பயோமைனிங் முறையில் இங்கு குப்பைகளை அழிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில், சிலா் அனுமதியின்றி மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வந்ததாகவும், அதிகாரிகள் கவனத்துக்கு தெரியவந்தும், அவா்கள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல அனுமதியின்றி, சிலா் அப்பகுதியில் குப்பைகள் சேகரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் அனுமதியின்றி மாட்டுப்பண்ணை நடத்தி வருவதாக, மேயா் கல்பனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் குப்பைக்கிடங்கில் அண்மையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அதில், அங்கு மாட்டுப்பண்ணை செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா். மேலும், அதிகாரிகளை மேயா் எச்சரிக்கும் விடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் கூறுகையில், ‘ மாநகராட்சி அனுமதியின்றி வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் அமைக்கப்பட்ட மாட்டுப்பண்ணையை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT