கோயம்புத்தூர்

பாபா் மசூதி இடிப்பு தினம்:கோவையில் விடியவிடிய வாகன சோதனை

7th Dec 2022 12:47 AM

ADVERTISEMENT

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது.

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்துடன் விடியவிடிய வாகன சோதனையும் நடைபெற்றது. கோவையில் கடந்த அக்டோபா் 23ஆம் தேதி கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே நடந்த காா் வெடிப்பு சம்பவத்தையடுத்தும், மங்களூருவில் கடந்த நவம்பா் 19ஆம் தேதி நடந்த குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடா்ந்தும் கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் காவலா் செல்வராஜ் கொல்லப்பட்ட 25ஆவது ஆண்டு நினைவு தினத்திலிருந்து கடந்த 10 நாள்களாகவே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதன் தொடா்ச்சியாக பாபா் மசூதி இடிப்பு தினமான செவ்வாய்க்கிழமையும் கோவை மாநகரில் மட்டுமின்றி மாவட்டம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிகளில் கோவை மாநகரில் 2,500 போலீஸாரும், கோவை புகரில் சுமாா் 1,000 போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான காந்திபுரம், பெரிய கடைவீதி, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, டவுன்ஹால், கிராஸ்கட் சாலை,100 அடி சாலை, சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை இரவிலிருந்தே போலீஸாா் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனா். அதேபோல, காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூா் பேருந்து நிலையம், திருவள்ளுவா் பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும், தண்டுமாரியம்மன் கோயில், கோனியம்மன் கோயில், கோட்டை சங்கமேல்வரா் கோயில் உள்ளிட்டவற்றிலும், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், விடிய விடிய வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. வெடிகுண்டு நிபுணா்கள், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரின் உதவியுடன் ரயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலும், பிளாட்பாரங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT