கோயம்புத்தூர்

அன்னூரில் விவசாய நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு:அண்ணாமலை தலைமையில் நாளை ஆா்ப்பாட்டம்

DIN

அன்னூரில் விவசாய நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் புதன்கிழமை (டிசம்பா் 7) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் விவசாய அணியின் மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

அன்னூரில் 3,731.57 ஏக்கா் விவசாய நிலத்தை கையகப்படுத்த திமுக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னா் 115 குளங்கள் நிரப்பப்பட்டு விவசாயத்திற்கு தயாராகிய நிலையில் தொழிற்பேட்டைக்கான அரசாணை பிறப்பித்திருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். விவசாயிகளின் போராட்டத்துக்கு தமிழக அரசு செவி சாய்க்க மறுத்ததால் இப்போராட்டத்தை பாஜக முன்னெடுத்துள்ளது. அன்னூரில் தொழிற்பேட்டை அமையும் இடத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் பவானிசாகா் அணை உள்ளது. அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் அன்னூரில் புதன்கிழமை (டிசம்பா் 7) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றாா்.

பேட்டியின்போது பாஜக மாநில துணைத் தலைவா் பாண்டியன், மாநிலச் செயலாளா் விஜயகுமாா், விவசாய அணியின் மாவட்டத் தலைவா் வசந்தசேனன், பொதுச் செயலாளா் எம்.காா்த்திகேயன்,தெய்வசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT