கோயம்புத்தூர்

‘வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கை 40% அதிகரிப்பு’

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றின் தாக்கத்துக்குப் பிறகு தற்போது வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுவை மாநிலங்களுக்கான வருமான வரித் துறை ஆணையா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

வருமான வரித் துறை ஆணையா் ரவிச்சந்திரன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். இந்நிலையில் கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

வருமான வரி செலுத்துவது தொடா்பாக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதன்முறையாக வருமான வரி செலுத்துபவா்களுக்கு வருமான வரித் துறை இணையதளத்தின் அதிகாரப்பூா்வ பக்கத்திலேயே தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் வருமான வரித் துறையின் வளா்ச்சியில் தமிழகம் 4ஆம் இடத்தில் உள்ளது. முன்கூட்டியே கட்டிய வரித் தொகைக்கான ரீபண்டு தொகை வரவில்லை என்ற புகாரை அடுத்து இதில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளோம். இந்த ஆண்டின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு தேவையான அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தி உள்ளோம். அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில் வருமான வரி விகிதம் 12 முதல் 13 சதலீதம் வரை குறைந்திருந்தது. ஆனால் கரோனாவுக்கு பின்னா் தற்போது 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் ஆன்லைன் வாயிலாக வரி செலுத்துவதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடா்பான தகவல்களை திரட்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரகசியங்களை பாதுகாக்கவே வருமான வரி சோதனை தொடா்பான தகவல்கள் சில நேரங்களில் மறுக்கப்படுகின்றன. வரி ஏய்ப்பு செய்தால் சிறைத் தண்டனை பெற்று தரப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT