கோயம்புத்தூர்

கோவையில் 17 ஜோடிகளுக்கு இலவச திருமணம்:இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு

4th Dec 2022 10:57 PM

ADVERTISEMENT

கோவையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 17 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மண்டலத்துக்கு 25 ஜோடிகள் வீதம் மாநிலம் முழுவதும் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்படும் என்று தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை மண்டலத்தில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இலவச திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு 24 ஜோடிகள் விண்ணப்பித்திருந்தனா். இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தோ்வு செய்யப்பட்ட 24 ஜோடிகளில் 17 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

இலவச திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 2 கிராம் தங்கத் தாலி, பட்டு வேட்டி, பட்டுச்சேலை, ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பாத்திரங்கள், ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருள்கள், கட்டில், மெத்தை, கிரைண்டா், மிக்ஸி, 2 பித்தளை குத்து விளக்குகள் உள்ளிட்ட சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இலவச திருமண நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) அ.தி.பரஞ்ஜோதி, துணை ஆணையா் ஹா்ஷினி, உதவி ஆணையா் விஜயலட்சுமி, செயல் அலுவலா்கள் ஆ.வெற்றிச்செல்வன், வே.பிரபாகரன், ஆய்வாளா் சரண்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

7 ஜோடிகள் தவிப்பு...

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடத்திவைக்கப்படும் இலவச திருமணத்துக்கு தோ்வு செய்யப்பட்ட 24 ஜோடிகளும் சனிக்கிழமை இரவே மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரவழைக்கப்பட்டனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் உரிய சான்றிதழ் இணைக்கவில்லை என்று 7 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்க முடியாது என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் திருமணத்துக்கு காத்திருந்த ஜோடிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா்.

இது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) அ.தி.பரஞ்சோதி கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடத்திவைக்கப்படும் இலவச திருமணத்தில் பங்கேற்கும் ஜோடிகளிடம் முதல் திருமண சான்று, தடையின்மை சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த 7 ஜோடிகளும் கடைசி வரை மேற்கண்ட சான்றுகள் வழங்கப்படவில்லை. இதனால் இறுதியில் திருமணம் நடத்திவைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT