கோயம்புத்தூர்

புத்தாண்டு, பொங்கல் பண்டிகை: கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

4th Dec 2022 10:59 PM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து கோவை வழித்தடத்தில் தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை, தொடா் விடுமுறை தினங்களில் சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோவை ரயில் பயணிகள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

பண்டிகை நேரங்களில் அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக காணப்படும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயிலில் செல்வதற்கு விரும்புகின்றனா். எனவே, வருகிற டிசம்பா் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13,14, 15 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். குறிப்பாக, மதுரை, நாகா்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அதிகப்படியாக இயக்க வேண்டும். கோவையில் இருந்து மதுரைக்கு பகலில் இயக்கப்படும் ரயிலின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு இரவு நேரத்தில் கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும். இதேபோல, கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி, திருப்பூா், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் தங்கி, தென்மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் வேலை செய்து வருவதால் அவா்களின் வசதிக்காக கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழனி வழித்தடத்தில் மதுரை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT