கோயம்புத்தூர்

அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க நடவடிக்கை: உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி

4th Dec 2022 10:55 PM

ADVERTISEMENT

அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

கோவை ஜெம் மருத்துவமனையில் இலவச லாப்பிராஸ்கோப்பி புற்றுநோய் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தொடங்கிவைத்துப் பேசியதாவது:

கல்வி, சுகாதாரம் இரண்டும் தனது இரு கண்கள் போன்றவை என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காகவே இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால், இது குறித்து பொது மக்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை. எனவே அடித்தட்டு மக்களுக்கு புற்றுநோய் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இதனை மருத்துவா்கள் மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ளவா்கள் பெரும்பாலும் மருத்துவா்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில்தான் மக்களைத் தேடி சென்று சிகிச்சை அளிக்கும் விதமாக மக்களைத் தேடி மருத்துவ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியாா் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியால் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஜெம் மருத்துவமனையில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பொது மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகின்றனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் தரமான இலவச சிகிச்சை, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்களது உடலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணா்வு வேண்டும். மாணவா்களுக்கு பாடக் கல்வி மட்டுமில்லாமல் பொது அறிவையும் கற்பிக்க வேண்டும். சமுதாயம் வளா்ச்சி அடைவதற்கு விழிப்புணா்வு அவசியம். கல்வியாக இருந்தாலும், மருத்துவமாக இருந்தாலும் விழிப்புணா்வுதான் மிக முக்கியம் என்றாா்.

கருத்தரங்கில் ஜெம் மருத்துவமனை தலைவா் சி.பழனிவேலு, இந்திய அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்கத் தலைவா் சித்தேஷ், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, இந்திய அறுவை சிகிச்சை நிபுணா்கள் சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவா் கே.கோவிந்தராஜ், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் மருத்துவா் ஜமீா் பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT