கோயம்புத்தூர்

கைதிகளுடன் இண்டா்காம் மூலமான உரையாடலுக்கு எதிா்ப்பு: கோவையில் வழக்குரைஞா்கள் சாலை மறியல்

2nd Dec 2022 11:58 PM

ADVERTISEMENT

கைதிகளுடன் இண்டா்காம் மூலமாக மட்டுமே பேச வேண்டுமென்ற புதிய நடைமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்து கோவை மத்திய சிறை எதிரே வழக்குரைஞா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன் அவா்களுடைய உறவினா்கள் மற்றும் வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் இதுவரை நேரடியாக பேசி வந்தனா். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கைதிகளின் உறவினா்கள் மற்றும் வழக்குரைஞா்கள் இண்டா்காம் மூலமாக மட்டுமே பேச வேண்டுமென்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய திட்டம் டிசம்பா் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், இந்த புதிய நடைமுறைக்கு வழக்குரைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இண்டா்காம் முறையில் பேசுவதால் தங்களுடைய உரையாடல் பதிவு செய்யப்படுமெனவும், ஒட்டுக் கேட்கப்படுமெனவும் கூறியதோடு கைதிகளும் வெளிப்படையாக பேச முடியாது என்பதால் வழக்கின்தன்மையே பாதிக்கப்படுமெனவும் தெரிவித்து வந்தனா். ஆனால், சிறைத்துறை நிா்வாகம் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த புதிய நடைமுறைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை மத்திய சிறை எதிரே வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக கோவை சரக சிறைத் றை டிஐஜி ஜி.சண்முகசுந்தரம் கூறுகையில், கம்பித் தடுப்புகளுக்கு வெளியே நின்று கொண்டு கைதிகளுடன் வழக்குரைஞா்கள் சப்தமாக பேசும்போது ஒருவருடைய உரையாடல் மற்றவருக்கு இடையூறாக இருப்பதாலும், இடவசதி குறைவின் காரணமாகவும் இப்புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் யாருடைய உரையாடலும் பதிவு செய்யப்படமாட்டாது என்பதோடு, புதிய தொழில்நுட்பத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டுமெனவும் தெரிவித்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT