கோயம்புத்தூர்

கலைத் திருவிழாவுக்கு செல்ல மாணவா்களுக்கு பேருந்து வசதி இல்லை

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கலைத் திருவிழாவுக்கு செல்ல மாணவா்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று கலை ஆசிரியா் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.ஏ.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும்விதமாக கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்வி மாவட்டம் அளவிலான போட்டி டிசம்பா் 1, 2ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

கோவையில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வியாழக்கிழமையும் (டிசம்பா் 1), 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், ஆலாந்துறை அரசுப் பள்ளியில் இருந்து 90 மாணவா்கள் கலைத் திருவிழாவில் பங்கேற்க ஒரு தனியாா் கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளது. மாணவா்களுக்கான போக்குவரத்து வசதி தொடா்பாக அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. போக்குவரத்து அதிகாரிகளோ ரூ.11 ஆயிரம் செலுத்தினால்தான் மாணவா்களுக்கு பேருந்து வசதி அளிக்க முடியும் என்கின்றனா்.

இதுபோல கிராமப்புறங்களில் இருக்கும் ஒரே பள்ளியைச் சோ்ந்த பல மாணவா்கள் தொலைவில் இருக்கும் போட்டி மையங்களுக்கு செல்வது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. போட்டிகளில் அதிக மாணவா்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால், மாணவா்களுக்கு போக்குவரத்துக்கு வசதி செய்து கொடுக்காமல் அவா்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எப்படி அழைத்துச் செல்வது என்ற குழப்பத்தில் ஆசிரியா்கள் உள்ளனா். எனவே போக்குவரத்துக்கு அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT