கோயம்புத்தூர்

சூலூா் அருகே தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வேண்டும்:ஆட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சூலூா் அருகே அமைக்கப்படவுள்ள தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாவட்டம், சூலூா் வட்டம் வாரப்பட்டி கிராமம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் 421 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், சூலூா் வட்டத்தில் வாரப்பட்டி, கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், பூசாரிபாளையம், வி.சந்திராபுரம், குளத்துப்பாளையம், புளியமரத்துப்பாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 421 ஏக்கா் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் சாா்பில் ராணுவ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது.

இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைவாக இருந்தாலும் தென்னை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கால்நடைகள் வளா்ப்பு, கோழி வளா்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோம். இந்நிலையில் விவசாய நிலத்தை அழித்து அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதனால், இப்பகுதியில் உள்ள 2,500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்களை அழித்து உருவாக்கப்படும் தொழிற்பேட்டையால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தொழிற்பேட்டையில் பவுண்டரிகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதனால் நிலத்தடி நீா் கடுமையாக பாதிக்கப்படும். ரசாயனக் கழிவுகளால் அருகில் உள்ள கிராமங்களிலும் விவசாயம் பாதிக்கப்படும். மேலும், குடிநீருக்கும் திண்டாட வேண்டிய நிலை உருவாகும். பெருந்துறை தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவுகளால் அப்பகுதி மக்கள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பையும், பல்வேறு பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றனா். எனவே விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT