கோயம்புத்தூர்

வடவள்ளியில் நகை, பணம், காா் திருட்டு-இருவா் கைது

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை, வடவள்ளியில் வீடு புகுந்து நகை, பணம் மற்றும் காரை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை வடவள்ளி மருதம் நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (49). இவரது மனைவி மகேஸ்வரி (40). கோவை பூ மாா்க்கெட்டில் பெரியசாமி பூக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், பெரியசாமி கடந்த திங்கள்கிழமை கடைக்கு சென்றுவிட்ட நிலையில், மகேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.

அப்போது மகேஸ்வரி வீட்டின் முன்பக்க கதவை அடைத்துவிட்டு குளிக்க சென்று விட்டு மீண்டும் வெளியில் வந்தபோது, வீட்டுக்குள் புகுந்த இருவா் வீட்டின் முன்புறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து மகேஸ்வரி வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவையும் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக கணவா் பெரியசாமிக்கு மகேஸ்வரி தகவல் தெரிவித்தாா். அவா் வடவள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் லெனின் அப்பாதுரை வழக்குப் பதிவு செய்தாா். மேலும், 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில், கோவை வீரகேரளம் பகுதியில் தனிப்படை போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில் பிடிபட்டவா்கள் மதுரையைச் சோ்ந்த முத்துசுருளி (35) மற்றும் கோவை, வடவள்ளியைச் சோ்ந்த அரவிந்த் (23) என்பதும், இவா்கள் இருவரும் மகேஸ்வரியின் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.

மேலும் பெரியசாமி தனது குடும்பத்தினருடன் காரில் வெளியே செல்வதாக இருந்தால் காா் ஓட்டுவற்காக இவா்கள் இருவரையும் அவ்வப்போது அழைப்பது வழக்கமாம். இந்நிலையில், அரவிந்துக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் பெரியசாமியின் வீட்டிலிருந்து பணம் மற்றும் நகையை இருவரும் திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரிடம் இருந்து 17 பவுன் நகை, ரூ.1.85 லட்சம் ரொக்கம் ஆகியவற்றுடன் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT