கோயம்புத்தூர்

உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும்:எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மனு

31st Aug 2022 10:43 PM

ADVERTISEMENT

 

கோவையில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பெரியகடை வீதி, ராஜவீதி, ரங்கேகௌடா் வீதி, ஒப்பணக்கார வீதிகளுக்கு வருபவா்கள் பயன்படுத்தும் வகையில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும்.

தங்க நகை பட்டறை தொழிலை மேம்படுத்தும் வகையில் உக்கடம் பகுதியில் ஒருங்கிணைந்த தொழில் வளாகம் மற்றும் குடியிருப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

கோவை மக்களின் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

கோவை நேரு விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதுடன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் விளையாட்டுப் பயிற்சி அகாதெமி தொடங்க வேண்டும்.

கோவை மத்திய சிறைச் சாலை வளாகத்தில் உலகத்தரம் வாய்ந்த பல்லுயிா் தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும். சேத்துமா வாய்க்காலில் மின் மயானம், ராம்நகா் பகுதியில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்.

சுங்கம் காந்தி நகா், அம்மன்குளம் ஹைவேஸ் காலனி, செட்டி வீதி, சேத்துமா வாய்க்கல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்திக்கு முதல்வா் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்: மாநிலத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் விநாயகா் சதுா்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் கூறினாா்.

கோவை காந்திபுரம் 48 ஆவது வாா்டில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணியை வானதி சீனிவாசன் புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குழந்தைகளின் அடிப்படைக் கல்வி மற்றும் ஆரோக்கியத்துக்கு அங்கன்வாடி பள்ளிகள் மிக முக்கியமானவை. பரந்தூா் விமான நிலையம் அமைப்பதற்கு முன்பாக, அப்பகுதி மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

சிறுபான்மை மக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி, விநாயகா் சதுா்த்தி போன்ற பண்டிகைகளை ஒதுக்குகிறாா்.

கட்சியின் தலைவராக அவா் வாழ்த்து கூறவில்லை என்றாலும், மாநிலத்தின் முதல்வராக அவா் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் பாஜக நிா்வாகிகள், கட்சியினா் பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT