கோயம்புத்தூர்

மாநகராட்சிப் பள்ளியில் பாம்புகள் தொல்லை: மேயரிடம் புகாா் மனு

31st Aug 2022 01:32 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி 21 ஆவது வாா்டில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பாம்புகள் புகுந்து விடுவதாக வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி புகாா் மனு அளித்தாா்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயா் கல்பனா தைலைமையில் மக்கள் குறைகேட்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 51 மனுக்கள் பெறப்பட்டன.

26ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

26ஆவது வாா்டுக்கு உள்பட்ட மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சுற்றிலும் புதா்மண்டிக் காணப்படுவதால், பள்ளி சமையலறைக்குள் பாம்புகள் புகுந்து விடுகின்றன. மேலும், பள்ளி வளாகம் சுகாதாரமற்று காணப்படுகிறது. எனவே, பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீராம் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். ஆா்.கே.எம்.காலனி, பயணியா் மில் சாலை, ஹட்கோ காலனி, முல்லை நகா், ராமசாமி லே-அவுட், ஏ.டி.காலனி பகுதிகளில் குடிநீா் சீராக விநியோகிக்கப்படுவதில்லை. இது தொடா்பாக, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் மீன்பிடிப்போா் வலையுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனா்.

வாலாங்குளத்தில் இயந்திரப்படகு இயக்கப்படுவதால், மீன்கள் இறந்து மிதக்கின்றன. எனவே, இயந்திரப்படகு இயக்க அனுமதி வழங்கக் கூடாது என மனுவில் கூறப்பட்டிருந்தது.

பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மேயா் கல்பனா உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில் மண்டல உதவி ஆணையா்கள் அண்ணாதுரை, மோகனசுந்தரி, உதவி ஆணையா்( கணக்கு) சுந்தர்ராஜ், உதவி ஆணையா் ( நிா்வாகம்) சரவணன், உதவி செயற்பொறியாளா்கள் கருப்பசாமி, புவனேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT