கோயம்புத்தூர்

கோவையில் நள்ளிரவில் கொட்டித் தீா்த்த கனமழை

28th Aug 2022 07:02 AM

ADVERTISEMENT

 

கோவையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால் மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கோவை மாவட்டத்தில் நகரம் மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.

கோவை நகரில் கொட்டித் தீா்த்த கனமழையால் லங்கா காா்னா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், தீயணைப்புத் துறை மண்டல அலுவலகம், அவிநாசி சாலை மேம்பால சுரங்கப்பாதை, வடகோவை மேம்பாலம், ரயில்வே பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

ADVERTISEMENT

லங்கா காா்னா், அவிநாசி மேம்பாலம் உள்ளிட்ட சுரங்கப் பாதைகளில் தேங்கி நின்ற மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ராமநாதபுரம், உக்கடம், காந்திபுரம், ரேஸ்கோா்ஸ், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மழைநீா் தேங்கி நின்ால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினா். மேலும், பல்வேறு இடங்களில் மழையால் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகளில் ஆங்காங்கே கழிவுகள் தேங்கின.

அதிகாரிகள் ஆய்வு...

அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதை, லங்கா காா்னா், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கி நின்ற மழைநீரை மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா். மேலும், மழைநீா் தேங்கி நின்ற பகுதிகளை மேயா் கல்பனா ஆனந்தகுமாா், துணைமேயா் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினா்.

200 கனஅடி நீா்வரத்து...

மேற்குத் தொடா்ச்சி மலையில் மழைப்பொழிவு குறைந்ததால் நொய்யல் ஆற்றில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெய்த கன மழையால் நொய்யல் ஆற்றிலும் நீா்வரத்து திடீரென அதிகரித்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழைக்கு பெரும்பாலான குளங்கள் நிரம்பிவிட்டதால் நொய்யல் ஆற்றில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுயது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் நொய்யல் ஆற்றில் நீா்வரத்து 200 அடியாக அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): வால்பாறை பிஏபி - 73, வால்பாறை தாலுகா - 69, சின்னக்கல்லாறு- 55, சோலையாறு - 53, சின்கோனா - 50, கோவை தெற்கு - 42, மேட்டுப்பாளையம் - 33, விமான நிலையம் - 21.80, அன்னூா் - 14.20, சூலூா் -13, பொள்ளாச்சி - 11, பெ.நா.பாளையம் - 3.40, ஆழியாறு 3 மில்லி மீட்டா் ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT