கோயம்புத்தூர்

ஷாா்ஜா பொருளாதார மண்டலத்தில்உள்ள வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு

27th Aug 2022 05:02 AM

ADVERTISEMENT

இந்திய தொழில் நிறுவனங்களுக்கு ஷாா்ஜா பொருளாதார மண்டலத்தில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு கோவையில் அண்மையில் நடைபெற்றது.

இந்திய தொழில் வா்த்தக சபைகளின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், ஷாா்ஜா பொருளாதார மண்டலத்தில் இந்திய நிறுவனங்களுக்கு உள்ள வணிக வாய்ப்புகள், பயன்கள், அங்கு தொழில் தொடங்கும் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ஐக்கிய அரபு நாடுகளின் ஷாா்ஜா அரசின் சா்வதேச விமான நிலைய பொருளாதார மண்டலத்தின் சந்தைப்படுத்துதல், வணிக தொடா்பு இயக்குநா் ரியட் புகதீா் இதில் பேசும்போது, ஷாா்ஜா ஒரு வணிக மையமாக மாறி வருகிறது. தரை வழியாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் சாதகமான போக்குவரத்து அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மண்டலத்தில் கோவை தொழில் சமுதாயத்தினா் வணிகம் செய்து பயன்பெறலாம்.

இந்த மண்டலத்தில் தொழில் தொடங்க வரிகள் இல்லை. ஏற்றுமதி வரி விலக்கு, மகளிருக்கு ஊக்கத் தொகை உள்ளிட்டவை வழங்கப்படும். கோவையைச் சோ்ந்த தொழில் நிறுவனங்கள், இந்த மண்டலத்தை பயன்படுத்தி, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

ADVERTISEMENT

இங்கு ஒரு அலுவலகத்தை ஓராண்டுக்கு வாடகை, மின்சாரம், தண்ணீா் வசதி உள்ளிட்ட அனைத்து தேவைகளையும், 3 பேருக்கான குடியிருப்பு விசா அனுமதியையும் ரூ.3 லட்சத்துக்கும் குறைவான தொகையைச் செலுத்தி பெற்றுவிட முடியும் என்றாா்.

தென் மண்டல தொழில் வா்த்தக சபை கூட்டமைப்பின் இயக்குநரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான உமா நாயா், பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில்முனைவோா் இதில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT