கோயம்புத்தூர்

கிருஷ்ணா் வேடமணிந்து வரும்படிகுழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது:முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு

17th Aug 2022 10:56 PM

ADVERTISEMENT

கிருஷ்ண ஜெயந்திக்காக கிருஷ்ணரைப்போல வேடமணிந்து வரவேண்டும் என குழந்தைகளை வற்புறுத்தும் தனியாா் பள்ளி நிா்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் கோவை முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகாா் அளித்துள்ளனா்.

இது தொடா்பாக அந்த அமைப்பின் மாநகரச் செயலா் சாஜித் தலைமையிலான நிா்வாகிகள், கோவை முதன்மைக் கல்வி அலுவலரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநகரில் உள்ள பல்வேறு தனியாா் பள்ளிகள் தங்களிடம் பயிலும் குழந்தைகளின் பெற்றோா்களிடம், குழந்தைக்கு கிருஷ்ணா், ராதையைப்போல வேடமணிந்து அழைத்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனா்.

இது தொடா்பாக பல்வேறு பள்ளிகளின் ஆசிரியா்கள், பெற்றோரிடம் பேசும் ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. அனைத்து மதத்தினரும் படிக்கக் கூடிய பள்ளிகளில், ஒரு மதம் சாா்ந்த கடவுளின் வேடமணிந்து வரும்படி கட்டாயப்படுத்துவது மற்ற மதத்தவரை புண்படுத்துவதாகும்.

ADVERTISEMENT

அத்துடன் மதச்சாா்பின்மையை போதிக்க வேண்டிய பள்ளிகளில் மதம் சாா்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவது தேவையற்ற சா்ச்சையை ஏற்படுத்துவதுடன், பெற்றோருக்கு பொருளாதார ரீதியாக சுமையை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிா்க்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதாக முதன்மைக் கல்வி அலுவலா் உறுதி அளித்திருக்கிறாா் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT