கோயம்புத்தூர்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதல்வா் ஆய்வு செய்ய வேண்டும்: ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தல்

17th Aug 2022 10:54 PM

ADVERTISEMENT

மேற்கு மண்டலத்துக்கு அடுத்த வாரம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களுக்கு நீா்ப்பாசன வசதியை அளிக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டு இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால் 2,200 மீட்டா் நீளத்துக்கு குழாய் பதிக்கும் பணி நிறைவேற்றப்படாததால் கடந்த 17 மாதங்களாக தடைபட்டிருக்கிறது. இதனால் அண்மையில் பவானி ஆற்றில் சென்ற உபரி நீா் வீணாக கடலில் கலந்திருக்கிறது.

இது தொடா்பாக பாஜக சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பாஜக பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுவதாக திமுகவினா் கூறி வருகின்றனா்.

ADVERTISEMENT

எனவே, ஆகஸ்ட் 23, 24, 25 ஆம் தேதிகளில் மேற்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரவுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இது தொடா்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT