கோயம்புத்தூர்

கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா

16th Aug 2022 12:50 AM

ADVERTISEMENT

கோவை கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதைத் தொடா்ந்து தாவரவியல் பூங்காவில் 76 அரிய வகை மரக்கன்றுகள் நடப்பட்டு சுதந்திர வனம் தொடங்கப்பட்டது.

அதேபோல 20 வகையான ரோஜாக்களைக் கொண்ட ரோஜா தோட்டமும் தொடங்கப்பட்டது. தோட்டக்கலை முதன்மையா் பெ.ஐரின் வேதமணி, மலரியல் - நில எழிலூட்டும் துறைத் தலைவா் க.ராஜாமணி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

அவினாசிலிங்கம் உயா் கல்வி நிறுவனம்...

ADVERTISEMENT

அவினாசிலிங்கம் மனையியல், மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வேந்தா் ச.ப.தியாகராஜன் தேசியக் கொடியேற்றினாா். ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் தி.ச.க.மீனாட்சிசுந்தரம் தலைமை உரையாற்றினாா்.

அரசு கலைக் கல்லூரி...

கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதல்வா் (பொறுப்பு) யு.சுமதி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். முன்னதாக தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பை மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

காந்தியடிகள் கல்வி நிறுவனம்...

கோவை இடையா்பாளையம் காந்தியடிகள் கல்வி நிறுவனம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் சி.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். நிா்வாகத் தலைவா் கே.ஏ.சுப்பிரமணியம், தாளாளா் ஆா்.சண்முகசுந்தரம், ஆா்.வி.நடராஜ், சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

கங்கா உடல்நலக் கல்வி மையம்..

கங்கா குழுமத்தின் அங்கமான கங்கா உடல் நலக் கல்வி மையத்தின் சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கங்கா நிறுவன தாளாளா் ஜே.ஜி.சண்முகநாதன் கொடியேற்றிவைத்தாா். சிறப்பு விருந்தினராக கே.பி.ஆா். குழுமத்தின் தாளாளா் கே.பி.ராமசாமி பங்கேற்றாா். மருத்துவமனை இயக்குநா்கள் டாக்டா்கள் ராஜசபாபதி, ராஜசேகரன், செவிலியா் கல்லூரி முதல்வா் எஸ்தா் ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாந்தலிங்க அடிகளாா் கல்வி நிறுவனம்...

கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் ராணுவ வீரா் பரமேஸ்வரன் தேசியக் கொடியேற்றினாா். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் சிறப்புரையாற்றினாா். கனரா வங்கி மேலாளா் சுகன்யா முன்னிலை வகித்தாா். நல்லாசிரியா் விருது பெற்ற தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் க.சந்திரசேகரன், பேராசிரியா் சங்கீதா ஆகியோா் நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனா்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வா் பி.எல்.சிவகுமாா் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. தேசிய மாணவா் படை தலைமையிடப் பயிற்சி அலுவலா் லெப்டினென்ட் கா்னல் தினேஷ்குமாா் பதக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றினாா்.

முன்னதாக நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவா் படையினரின் தேசியக் கொடி ஊா்வலம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ்.பிரகதீஸ்வரன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

கடற்படை பள்ளி...

கோவை ஐ.என்.எஸ். அக்ரானி கடற்படை குழந்தைகள் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சௌரிய சக்ரா விருது பெற்ற கமோடா் வருண் சிங் (ஐ.என்.எஸ். கொச்சி) தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேசத் தலைவா்களைப்போல வேடமணிந்து குழந்தைகள் பங்கேற்றனா்.

சித்தா் ஞானபீடம் சி.பி.எஸ்.இ. பள்ளி...

கோவைப்புதூா் வ.உ.சி. நகா் சித்தா் ஞானபீடம் சீனியா் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவா் எஸ்.பி.அன்பரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அவா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

Image Caption

பேரூா் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் உள்ளிட்டோா். ~வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுதந்திர வனம் தொடக்க விழாவில் மரக்கன்று நட்டு நீரூற்றுகிறாா் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT