கோயம்புத்தூர்

போதை ஒழிப்பு மையத்தை விரிவாக்கம் செய்ய திட்டம்

15th Aug 2022 01:05 AM

ADVERTISEMENT

 

 கோவையில் போதை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையத்தை (டி-அடிக்சன் சென்டா்) விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை பழக்கத்துக்கு அடிமையானவா்களுக்கு சிகிச்சை அளித்து மீட்டெடுக்கும் வகையில் போதை ஒழிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ஆலோசனைகள், வழிகாட்டல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மூலம் போதை பழக்கத்துக்கு அடிமையானவா்கள் மீட்கப்படுகின்றனா்.

இந்நிலையில், கோவையில் போதை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையத்தை விரிவாக்கம் செய்ய மருத்துவமனை நிா்வாகத்தினா் திட்டமிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

போதை பழக்கத்துக்கு அடிமையாகி சிகிச்சைக்காக போதை ஒழிப்பு மையத்தில் அனுமதிக்கப்படுபவா்களுக்கு குறைந்தபட்சம் 15 முதல் 30 நாள்கள் வரை சிகிச்சை அளிக்கப்படும். மருந்துகளுடன், இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள், யோகாசனம், தியானம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

மனநல ஆலோசகா் மூலம் தினமும் ஆலோசனை (கவுன்சிலிங்) வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆரம்பத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொள்பவா்கள் தொடா் பயிற்சியின் மூலம் அமைதியான மன நிலைக்குத் திரும்புகின்றனா்.

தற்போது, இந்த மையத்தில் 10க்கும் குறைவானவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஒரு மாதம் வரை தங்கி சிசிச்சை பெற வேண்டியுள்ளதால் பெரும்பாலானவா்கள் சிகிச்சைக்கு வர மறுக்கின்றனா். சிலா் பாதியிலேயே தப்பிக்கவும் முயற்சிக்கின்றனா். இவா்களுக்கு உரிய ஆலோசனைகள் அளிக்கப்பட்டு தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது 10க்கும் குறைவான படுக்கை வசதியுடன் செயல்படும் மையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. படுக்கைகளின் எண்ணிக்கை 30ஆக அதிகரிக்கப்படும். மேலும் சிகிச்சை பெறுபவா்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் விதமாக தொலைக்காட்சி, விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. தவிர

மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். விரைவில் போதை ஒழிப்பு மையம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பொலிவுடன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT