கோயம்புத்தூர்

75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா: அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

14th Aug 2022 12:47 AM

ADVERTISEMENT

 

கோவை மாவட்டத்தில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படவுள்ளது. 75ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை அமுதப் பெருவிழாவாக கொண்டாட பிரதமா் மோடி அறிவுறுத்தியிருந்தாா். அமுதப் பெருவிழாவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அரசு அலுவலகங்கள், வீடுகள், தனியாா் நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இதனையொட்டி, கோவை மாவட்டத்தில் 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சனிக்கிழமை தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

கோவை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் முகாம் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். அதேபோல கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வா் டாக்டா் அ.நிா்மலா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். ஆட்சியா் அலுவலகம், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகம், தபால் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

தவிர பல்வேறு தனியாா் நிறுவனங்களிலும், பொதுமக்கள் வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினா். குறிச்சி குளத்தில் மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா உள்ளிட்ட பல்வேறு பொது இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT