கோயம்புத்தூர்

ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் பயணிகளிடம் ஒப்படைப்பு

14th Aug 2022 12:46 AM

ADVERTISEMENT

 

கோவையில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளில் கட்டணம் திரும்பப் பெறப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

சுதந்திர தினத்தையொட்டி வருகிற தொடா் விடுமுறை நாள்களையொட்டி, கோவையில் தங்கிப் படிக்கும் வெளியூா் மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை மாலை முதலே ரயில்கள், பேருந்துகளில் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வருகின்றனா். முன்னதாக பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக பெரும்பாலானோா் ஆம்னி பேருந்துகளில் ஊா்களுக்கு சென்றனா். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வழக்கமான கட்டணத்தை விட 2 மற்றும் 3 மடங்கு கூடுதலாக பயணிகளிடம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக, பயணிகள் தரப்பில் புகாா்கள் எழுந்ததைத் தொடா்ந்து, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, கோவையில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், மோட்டாா் ஆய்வாளா்கள் அடங்கிய 5 தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த தனிப் படையினா் ஆம்னி பேருந்துகளில் சனிக்கிழமைமுதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். பயணிகளிடம், பயண சீட்டுகளைப் பெற்று கூடுதல் கட்டணம் வசூலிப்பு குறித்து கேட்டறிந்தனா்.

இதுதொடா்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஒருவா் கூறுகையில், ‘கோவையில் 50 தனியாா் ஆம்னி பேருந்துகளில் சனிக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளின் ஊழியா்களிடம் இருந்து கூடுதல் கட்டணத் தொகை திரும்பப் பெறப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த சோதனை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நடைபெறும். தொடா்ந்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கைகள் மேறகொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT