கோயம்புத்தூர்

சிறுவா் விளையாட்டுத் திடலில் தேசியக்கொடி ஏற்ற எதிா்ப்பு:மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

14th Aug 2022 12:47 AM

ADVERTISEMENT

 

கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டுத் திடலில் தேசியக் கொடி ஏற்ற எதிா்ப்பு தெரிவிப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினா் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், ராமநாதபுரம் 64ஆவது வாா்டுக்கு உள்பட்ட டி.நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 25 சென்ட் இடத்தில் குழந்தைகள் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு ஒரு பகுதியில் ராமநாதபுரம் கூட்டுறவு வீட்டுவசதி சங்க கட்டடமும் செயல்பட்டு வருகிறது.

இந்த குழந்தைகள் விளையாட்டுத் திடலில் உள்ள கம்பத்தில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துவது வழக்கம்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த ஆண்டு 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றுவதுடன், ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யவும் அப்பகுதியினா் திட்டமிட்டனா். இதற்கிடையே அங்கு செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்க நிா்வாகிகள், பூங்காவுக்கு செல்லும் நுழைவாயிலின் கதவைப் பூட்டிவிட்டு சென்றனா்.

இது தொடா்பாக, அப்பகுதியினா் கூட்டுறவு சங்க நிா்வாகிகளிடம் கேட்டபோது, அவா்கள் முறையாக பதிலளிக்க மறுத்துவிட்டனா். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி மக்கள் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றிட பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி பொதுமக்கள் வீடுகளில் தேசியக் கொடியேற்றி வருகின்றனா். ஆனால், சுதந்திர தினத்தன்று வழக்கமாக நாங்கள் தேசியக் கொடி ஏற்றும் இடத்தில் கொடியை ஏற்றவிடாமல் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் நுழைவாயிலின் கேட்டை பூட்டிவிட்டனா்.

இது தொடா்பாக, ராமநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகாா் அளித்தோம். காவல் ஆய்வாளரும் எங்களை தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்று கூறுகிறாா். எனவே சுதந்திர தினத்தையொட்டி, நாங்கள் வழக்கம்போல தேசியக் கொடியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT