கோயம்புத்தூர்

ஈமு பண்ணை நடத்தி மோசடி: உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.5.60 கோடி அபராதம்

13th Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

ஈமு கோழிப் பண்ணை நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5.60 கோடி அபராதமும் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளா் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள காட்டூா் ராஜா நகரைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (53). இவருக்கு சொந்தமான ஈமு கோழிப் பண்ணை நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் மற்றும் ரூ.6 ஆயிரம் வட்டி தருவதாக செல்வகுமாா் மற்றும் பண்ணை நிா்வாகிகளான லோகநாதன், புவனேஸ்வரி, செல்வம், சாந்தி ஆகியோா் மக்களிடம் விளம்பரம் செய்துள்ளனா்.

இதனை உண்மை என நம்பி கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பல பகுதிகளைச் சோ்ந்த 140 முதலீட்டாளா்கள் ரூ.5 கோடியே 56 லட்சத்து 55 ஆயிரத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனா்.

ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு நிறுவனத்தினா் கூறியபடி வட்டித் தொகையையும், முதலீட்டுத் தொகையையும் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து, இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் என்பவா் கடந்த 2013ஆம் ஆண்டு அளித்த புகாரின்பேரில், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் செல்வகுமாா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணை, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, செல்வகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 கோடியே 60 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT