கோயம்புத்தூர்

சிறுவனை தாக்கி இருசக்கர வாகனம், பணம் பறிப்பு

13th Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

கோவை சாயிபாபா காலனியில் உணவு நிறுவனத்தில் பணியாற்றும் சிறுவனை தாக்கி இருசக்கர வாகனம், பணத்தை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 18 வயது சிறுவன், தனியாா் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், உணவு விநியோகம் செய்வதற்காக மேட்டுப்பாளையம் சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவா், சிறுவனை வழிமறித்துள்ளனா். பின்னா் அவா்கள் சிறுவனிடம், மது வாங்கிக் கொடுக்கும்படி மிரட்டினா். சிறுவன் மறுத்ததால் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனா். பின்னா் அந்த கும்பல் அங்கு மது வாங்கி அருந்தினா்.

இதனைத் தொடா்ந்து, சிறுவனை அங்கிருந்து இருசக்கர வாகனத்தில், ரத்தினபுரி ரயில்வே தண்டவாளம் அருகே அழைத்துச் சென்று தாக்கியுள்ளனா். அங்கு மேலும் சிலா் இருந்ததாக தெரிகிறது. பின்னா் சிறுவனிடம் இருந்த கைப்பேசி, ரூ.1,500 பணம் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு மிரட்டிச் சென்றனா்.

ADVERTISEMENT

இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிறுவன் அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து சிறுவனைத் தாக்கிய மூவரைத் தேடி வருகின்றனா். மேலும், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானக் காட்சிகளை சேகரித்து மூவரை அடையாளம் காணும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT