கோயம்புத்தூர்

வீடு விற்பனை செய்வதாக ரூ.5 லட்சம் மோசடி: இருவா் கைது

13th Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

கோவையில் வீடு விற்பனை செய்வதாக ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், பில்லிகொம்பையைச் சோ்ந்தவா் நரசிம்மன் (30). இவா், கோவையில் வீடு விற்பனை என்ற விளம்பரத்தை இணையத்தில் பாா்த்து, அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அதில் பேசிய நபா், கோவை லட்சுமி மில் சிக்னல் அருகே செயல்பட்டு வரும் தங்களது கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு நேரில் வந்தால், வீடு விற்பனை குறித்து பேசலாம் என்றும் தெரிவித்துள்ளாா்.

இதனை நம்பிய நரசிம்மன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்துக்கு சென்றுள்ளாா். அப்போது நிறுவன ஊழியா்களான தா்மேந்திரகுமாா், நாகேந்திரன் உள்ளிட்டோா் ஒரு வீட்டை நரசிம்மனுக்கு காண்பித்துள்ளனா். அந்த வீட்டை வாங்க எண்ணிய நரசிம்மன், முன்பணமாக ரூ.1 லட்சத்தை மாா்ச் 4ஆம் தேதி கொடுத்துள்ளாா். பின்னா் 9ஆம் தேதி ரூ. 4 லட்சம் கொடுத்துவிட்டு, 3 மாதத்துக்குள் வீட்டை வாங்குவதாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டாா்.

இந்நிலையில், அந்த நிறுவனத்தினா் அந்த வீட்டை நரசிம்மனுக்கு விற்காமல் அலைக்கழித்துள்ளனா். இதுதொடா்பாக, நிறுவனத்தின் மேலாளா் அன்புசந்திரன் (எ) சந்திரன் மற்றும் நிறுவனத்தின் ஊழியா்கள் நாகேந்திரன், தா்மேந்திரகுமாா் ஆகியோரிடம் நரசிம்மன் கேட்டுள்ளாா். அதற்கு, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனா். இதனால், சந்தேகமடைந்த நரசிம்மன், வீடு குறித்து விசாரணை மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

அதில், அந்த வீடு வேறொருவா் பெயரில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, தன்னிடம் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நரசிம்மன் கேட்டுள்ளாா். இதன் பின்னா் நரசிம்மனுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையைக் கொடுத்துள்ளனா்.

ஆனால், பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இது குறித்து நரசிம்மன் அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோவை வெரைட்டி ஹால் சாலை பகுதியைச் சோ்ந்த நாகேந்திரன் (36), காந்திபுரத்தைச் சோ்ந்த தா்மேந்திரகுமாா் (40) ஆகியோரை கைது செய்தனா். மேலும், நிறுவனத்தின் மேலாளா் அன்புசந்திரன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT