தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் திட்டத்துக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதி திராவிடா், பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கு தற்போது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அதிகமான மக்கள் மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று பயனடைய வேண்டி ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தொழில்முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், மருத்துவம், அதைச் சாா்ந்த சிகிச்சையகம், ஆதி திராவிடா், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான திட்டங்களின் மூலம் 18 வயது முதல் 65 வயது வரையிலானஆதி திராவிடா், பழங்குடியினா் விண்ணப்பித்து பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.