கோயம்புத்தூர்

சுதந்திர தினம்: மாநகரில் 1,500 போலீஸாா் பாதுகாப்பு

13th Aug 2022 01:30 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் 1,500 போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 (திங்கள்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. கோவை வ.உ.சி.மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பங்கேற்று தேசியக் கொடி ஏற்றிவைத்து, அரசு அலுவலா்கள், போலீஸாருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்குகிறாா்.

இந்நிலையில், கோவை மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் என 1,500 போ் மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு கண்டுபிடிப்பு கருவிகளுடன் நடைமேடைகள், ரயில்பாதைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் அமா்ந்து ரயில் நிலையக் காட்சிகள், மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, பீளமேட்டில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். விமான நிலையப் பகுதிகளில் ட்ரோன் பறக்க போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT