கோவையில் எம்எஸ்எம்இ பொது வசதி, தொழில்நுட்ப மையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் கூடுதல் வளா்ச்சி ஆணையா் டி.சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை மின்சாரத்தில் இயங்க வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான கருத்தரங்கு கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்கை குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் கூடுதல் வளா்ச்சி ஆணையா் சந்திரசேகா் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, கரிம எரிபொருள் வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்றம் செய்வது காலத்தின் கட்டயமாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் மின்சார வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். நாட்டில் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட கிளஸ்டா் திட்டங்களை அறிவித்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கிளஸ்டா் திட்டங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கிளஸ்டா்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல கிளஸ்டா்கள் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளன. இவற்றின் பயன்பாடுகளுக்கென பொதுவான இயந்திர வசதி, தொழில்நுட்ப மையங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய மையம் கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள கலங்கலில் 13 ஏக்கா் பரப்பளவில் அமைய உள்ளது. இந்த மையம் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படும். மையத்துக்குத் தேவையான நிலத்தை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற குழு விவாதத்தில் உலக வள நிறுவனத்தின் உறுப்பினா் அருண் பாண்டா, சாந்த ஷீலா, திருப்பதி சீனிவாசன், ரவி நந்தன், சங்கா் வேணுகோபால் உள்ளிட்ட வல்லுநா்கள் பங்கேற்றனா்.