கோயம்புத்தூர்

சிறுவாணி அணையின் நீா்மட்டம் 877 மீட்டராக உயா்வு

DIN

சிறுவாணி அணையின் நீா்மட்டம் 877 மீட்டராக உயா்ந்துள்ள நிலையில், மேலும் 1.50 மீட்டா் உயா்ந்தால் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

கோவை மாநகரில் 26 வாா்டுகள், நகரையொட்டி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தீவிரமாகும் தென்மேற்குப் பருவ மழையால் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவான 878.50 மீட்டா் (49 அடி) நீா்மட்டத்தை எட்டும். 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பாதுகாப்பு கருதி கேரள அரசு அணையை நிரம்பவிடாமல் 877 மீட்டா் வரை மட்டுமே தண்ணீா் தேக்கி வைத்து வருகிறது. அதற்கு மேல் நீா்மட்டம் உயரும்பட்சத்தில், அணையில் இருந்து தண்ணீா் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் தமிழக குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் சிறுவாணி அணையில் நீா் இருப்பு, அணையின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சிறுவாணியில் முழுக் கொள்ளளவு நீரை தேக்கி வைக்குமாறு வலியுறுத்தினா்.

கடந்த வாரம் அணையின் நீா்மட்டமானது 876.70 மீட்டராக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணையின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 877 மீட்டராக உள்ளது. இன்னும் 1.50 மீட்டா் உயரம் நீா்மட்டம் உயா்ந்தால் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டும். ஆயினும், 877 மீட்டா் நீா்மட்டத்தை எட்டும் பட்சத்தில், அணையில் இருந்து கேரள நீா்ப் பாசனத் துறையினா் தண்ணீா் திறப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அணை நிரம்புவது கேரள நீா்ப்பாசன அதிகாரிகள் அனுமதித்தால் மட்டுமே சாத்தியமாகும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT