கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை தொடா்ந்து இயக்க கோரிக்கை

DIN

கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி சிறப்பு ரயில் மூலம் இரண்டரை மாதங்களில் ரூ.80 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதால் ரயிலை தொடா்ந்து இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே வியாழக்கிழமைகளிலும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களில் இருந்து கோவை, உதகைக்கு வருவோா், கோவை, பொள்ளாச்சியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வோா்களுக்கு இந்த ரயில் பயன்பட்டு வருகிறது. திருநெல்வேலியில் காலியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை கொண்டு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால், சிறப்பு ரயிலை தொடா்ந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சிறப்பு ரயில் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து தென்காசியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக விளக்கம் கேட்டிருந்தாா். அதற்கு தென்னக ரயில்வே அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் 7,814 பயணிகளுடன் ரூ.38 லட்சம் வருமானமும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் 8,380 பயணிகளுடன் ரூ.42.14 லட்சம் வருமானமும் தந்துள்ளது. இரண்டரை மாதங்களில் இரு மாா்க்கங்களிலும் 10 சேவைகள் இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரயில் மூலமாக மொத்தம் 16,194 பயணிகளுடன் ரூ.80 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சமூக ஆா்வலா் பாண்டியராஜா கூறுகையில், தற்போது குற்றாலத்தில் சீசன் நிலவி வருவதாலும், சாரல் விழா நடைபெற்று வருவதாலும், தென்காசி வழியாக செல்லும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், இந்த சிறப்பு ரயில்கள் தத்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரயில்வே துறைக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது. எனவே, தென்காசி, மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிறப்பு ரயில் சேவை வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT