கோயம்புத்தூர்

பணி நேரம் அதிகரிப்பு அரசாணையை திரும்பப் பெற வேண்டும்

9th Aug 2022 01:09 AM

ADVERTISEMENT

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்களின் பணி நேரம் அதிகரிப்பு அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்களின் பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்பதை தற்போது காலை 8 மணி முதல் 4 மணி வரை என பணி நேரம் திருத்தியமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலச் செயலாளா் என்.ரவிசங்கா் தலைமையில் அரசு மருத்துவா்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்களின் பணி நேரம் என்பது ஏற்கெனவே காலை 8 முதல் மாலை 4 மணி வரை இருந்தது. இதனை சிறப்புக் குழு மூலம் ஆய்வு செய்து காலை 9 முதல் மாலை 4 மணி நேரம் என கடந்த 2009ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களின் பணி நேரத்தை மீண்டும் காலை 8 முதல் மாலை 4 மணி என மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவா்கள் வாரத்துக்கு 42 மணி நேரம் தொடா் பணியும், 5 மணி நேரம் அவசர சிகிச்சை பணியும் செய்து வருகின்றனா். மற்ற அரசு ஊழியா்கள் வாரத்துக்கு 37.5 மணி நேரம் மட்டுமே பணியாற்றுகின்றனா். ஆனால், அரசு மருத்துவா்கள் 42 மணி நேரம் பணியாற்றுகின்றனா். இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை மூலம் பணி நேரம் 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பணி நேரம் அதிகரிப்பு மருத்துவா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துயுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குநா் தன்னிச்சையாக செயல்பட்டு பணி நேரம் அதிகரிப்பு முடிவை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராமப்புறங்கள், போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த பகுதிகளுக்கு காலை 9 மணிக்கு செல்வது என்பதே பெரிய சவாலாக இருந்து வருகிறது. தற்போது 8 மணிக்கு செல்ல வேண்டும் என்றால் மருத்துவா்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

அரசு ஊழியா்களுக்கு சராசரியாக வாரத்துக்கு 40 மணி நேர வேலை மட்டுமே அளிக்க வேண்டும் என்று ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகமும் இதனை பரிந்துரை செய்கிறது. எனவே பணி நேர அதிகரிப்பு அரசாணையை தமிழக அரசு உடனிடியாக திரும்பப் பெற வேண்டும். தவிர மருத்துவா்கள் மட்டுமில்லாமல் அனைத்து மருத்துவமனை பணியாளா்களுக்கு காலை 9 முதல் மாலை 4 மணி வரை என்ற பணி நேரத்தையே வரைமுறைப்படுத்த வேண்டும் என்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT