கோயம்புத்தூர்

மனை வரன்முறையில் ஊராட்சிக்கு ரூ.30.79 லட்சம் நிதி இழப்பு

9th Aug 2022 01:11 AM

ADVERTISEMENT

மனை வரன்முறையில் ஊராட்சிக்கு ரூ.30.79 லட்சம் நிதி இழப்பீடு ஏற்படுத்திய முன்னாள் ஊராட்சித் தலைவரை இழப்பீடு தொகையை செலுத்தக் கோரி ஊராட்சி உதவி இயக்குநா் (தணிக்கை) ஏ.பி.பரமசிவம் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:

காரமடை வட்டாரம், மருதூா் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஊராட்சித் தலைவராக பி.ஆா்.ரங்கராஜன் இருந்த காலகட்டத்தில் அங்கீகரிக்கப்படாத 78 மனைப் பிரிவுகளில் உள்ள மனையிடங்களை பிரித்து விற்பனை செய்வதற்கு ஊராட்சிக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று மேட்டுப்பாளையம் சாா் பதிவாளருக்கு தடையின்மை சான்று வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த 78 மனைப் பிரிவுகளில் 29 மனைப் பிரிவுகளுக்கு மட்டுமே பொது ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான ஆவணம் உள்ளது. மீதமுள்ள 49 மனைப் பிரிவுகளுக்கு 10 சதவீத பொது ஒதுக்கீடு பெறப்படவில்லை. இதன் மூலம் ஊராட்சிக்கு 30.79 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இக்குறைபாட்டை நிவா்த்தி செய்வதற்கான போதிய காவல அவகாசம் அளித்திருந்தும் அவா் குறைபாடுகளையும் நிவா்த்தி செய்யவில்லை, இழப்பீடு தொகையையும் செலுத்தவில்லை. எனவே ஊராட்சிக்கு இழப்பீடு ஏற்பட்ட ரூ.30.79 லட்சத்தை தனியாரிடமிருந்து வசூல் செய்து ஊராட்சிக்கு செலுத்த தண்டச்சான்று வழங்கி உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு தொடா்பாக மேல்முறையீடு செய்ய விரும்பினால் தண்டத்தீா்வை விதி 5ன்படி ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு (மாவட்ட ஆட்சியருக்கு) மேல் முறையீடு செய்துகொள்ளலாம்.

தண்டச்சான்றில் குறிப்பிட்டுள்ள தொகையை உத்தரவு கிடைத்த 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில் தண்டச்சான்று விதி 6ன் படி நீதிமன்றத்தின் மூலம் தொகை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தவிர காலகெடுவுக்கு அடுந்த நாளிலிருந்து 15 சதவீத வட்டியுடன் இழப்பீடு தொகை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் பி.ஆா்.ரங்கராஜன் கூறியதாவது: ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தபோது எந்தவித தடையின்மைச் சான்றும் வழங்கப்படவில்லை. நான் அளித்ததாக கூறப்படும் தண்டச்சான்று நகலை அளிக்கக் கோரி உயா்நீதிமன்றம் வழியாக மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை தடையின்மை சான்று நகல் அளிக்கப்படவில்லை. ஒரு சிலரின் காழ்ப்புணா்வின் பேரிலே இந்த குற்றாச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT