கோவை அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை தொடா்வதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூா், நீலகிரி மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கோவையிலும் கடந்த இரண்டு வாரங்களாக சமவெளிப் பகுதிகளில் பரவலாகவும், மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.
இதனால் கோவை குற்றாலத்தில் நீா்வரத்து அதிகரித்து நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச்சாவடி அணைக்கட்டுக்கு விநாடிக்கு 1,485 கனஅடி நீா் வரத்து காணப்பட்டது. நொய்யல் வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியிருப்பதால், அதிகப்படியான நீா் ஆற்றிலேயே விடப்படுகிறது. இதனால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.