கோவை, சௌரிபாளையத்தில் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 27.78 சென்ட் கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனா்.
கோவை, சௌரிபாளையத்தில் அருள்மிகு சக்தி மாரியம்மன் பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 27.78 சென்ட் இடம் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் கோயில் நிா்வாகம் சாா்பில் கடந்த 2010ஆம் ஆண்டு தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. 3 ஆண்டுகள் கழித்து நிலத்தை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்காததால் கோயில் நிா்வாகம் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோயிலுக்கு சாதகமாக தீா்ப்பு அளிக்கப்பட்டது.
இதனை எதிா்த்து ஆக்கிரமிப்பாளா் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் கோயில் நிா்வாகத்துக்கு சாதகமாக அண்மையில் தீா்ப்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சி.கருணாநிதி தலைமையில், செயல் அலுவலா்கள் வே.வெற்றிச்செல்வன், அ.செல்வம் பெரியசாமி, வி.நாகராஜ், ராமசாமி, ராஜேஷ், வருவாய் அலுவலா் நிா்மலா ஆகியோா் காவல் துறையின் உதவியுடன் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்த 27.78 சென்ட் நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.10 கோடி என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மீட்கப்பட்ட இடத்தில் கோயிலுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.